சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருப்பூர் மாவட்ட வறட்சி நிலவரம்: 70 ஆயிரம் ஹெக்டரில் பயிர்கள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் 70 ஆயிரத்து 206 ஹெக்டர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :5 பிப்ரவரி 2013, 1:59 am

கே.கே.மணிகண்டன்

திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் 70 ஆயிரத்து 206 ஹெக்டர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
 2012-ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில் தான் மிகக் குறைந்த அளவாக 365.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளின் சராசரி மழை அளவான 602.45 மி.மீ. மழையில் பாதி அளவு கூட இந்த முறை பெய்யவில்லை.
 கடும் வறட்சியில் சிக்கியுள்ள இம்மாவட்டத்தில் தென்னை தவிர்த்து பிற பயிர்களின் மொத்த சாகுபடி பரப்பளவு என்பது ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 473 ஹெக்டர். ஆனால், கடந்த ஆண்டில் தெற்மேற்கு பருவ மழை காலத்தில் (காரீப்) 38 ஆயிரத்து 182 ஹெக்டர் பரப்பளவிலும், வட கிழக்கு பருவமழை காலத்தில் (ரபி) 38 ஆயிரத்து 154 ஹெக்டர் பரப்பளவிலுமாக 76 ஆயிரத்து 336 ஹெக்டர் பரப்பளவில் மட்டும் பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.
 இதில் வறட்சியால் 60 ஆயிரத்து 984 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டன. (பாதிக்கப்பட்ட விவசாயிகள் எண்ணிக்கை 71,507).
 அதேசமயம் 50 சதவீதத்துக்கும் குறைவான பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்கள் 9 ஆயிரத்து 222 ஹெக்டர் (பாதிக்கப்பட்ட விவசாயிகள் 11,397 பேர்) எனவும், 6 ஆயிரத்து 130 ஹெக்டர் பரப்பளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வேளாண்மைத் துறை கணக்கிட்டுள்ளது.
 நெல் சாகுபடி 81 ஹெக்டரில் மட்டும்: ஆண்டுதோறும் 11 ஆயிரத்து 440 ஹெக்டரில் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டில் சம்பா சாகுபடியில் 81 ஹெக்டர் பரப்பளவில் மட்டும் நெல் சாகுபடி செய்யப்பட்டு, விளைச்சல் பாதிப்பு 50 சதவீதத்துக்கும் கீழாக இருந்தது.
 சோளப் பயிர்கள்: 66 ஆயிரத்து 430 ஹெக்டரில் சோளம், மக்காச்சோளம் பயிரிடப்படும் நிலையில், கடந்தாண்டில் 48 ஆயிரத்து 177 ஹெக்டரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டது. அதில், 42 ஆயிரத்து 207 ஹெக்டர் பரப்பளவில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டது. 5 ஆயிரத்து 153 ஹெக்டரில் 50 சதவீதத்துக்கும் கீழ் பாதிப்பு இருந்தது. 817 ஹெக்டரில் பாதிப்பு ஏற்படவில்லை.
 பயறு வகைகள்: 19, 321 ஹெக்டரில் சாகுபடி செய்யப்படும் பயறு வகைகள், கடந்தாண்டில் 16,567 ஹெக்டரில் மட்டும் பயிரிடப்பட்டன. அதில், 13, 331 ஹெக்டரில் 50 சதவீதத்துக்கும் அதிமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. 3,236 ஹெக்டரில் பாதிப்பு இல்லை.
 எண்ணெய்வித்துப் பயிர்கள்: தென்னை தவிர்த்து பிற எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடி பரப்பளவான 10,508 ஹெக்டரில், கடந்த ஆண்டில் 5,589 ஹெக்டரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டன. அதில், 260 ஹெக்டரில் மட்டும் விளைச்சல் பாதிக்கப்படவில்லை.
 கரும்பு விளைச்சல்: 6 ஆயிரம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்படும் கரும்பு, கடந்தாண்டில் 5,532 ஹெக்டரில் மட்டும் நடைபெற்றது. 1,783 ஹெக்டரில் விளைச்சல் பாதிக்கப்படவில்லை. 3,749 ஹெக்டர் பரப்பளவில் 50 சதவீதத்துக்கும் கீழ் பாதிப்பு இருந்தது.
 பருத்தி விளைச்சல்: 774 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பருத்தி, கடந்தாண்டில் 390 ஹெக்டரில் மட்டும் நடைபெற்றது. இதில் 36 ஹெக்டரில் விளைச்சல் பாதிக்கப்படவில்லை. 117 ஹெக்டரில் 50 சதவீதத்துக்கும் கூடுதலான பாதிப்பும் இருந்தது.
 தென்னை மரங்கள் நிலவரம்: வறட்சியால் பாதிக்கப்படும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் பாதிப்பு தெரியவரும் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 2011-12-ஆம் ஆண்டு நிலவரம்: நெல் சாகுபடி 9,059 ஹெக்டர், மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட தானிய வகைகள் 55,864 ஹெக்டர், பயறு வகைகள் 19,420 ஹெக்டர், எண்ணெய்வித்துப் பயறுகள் 7,209 ஹெக்டர், கரும்பு சாகுபடி 8,135 ஹெக்டர், பருத்தி 676 ஹெக்டர் என மொத்த சாகுபடி ஒரு லட்சத்து 363 ஹெக்டர் பரப்பளவாக இருந்தது.
 கடந்தாண்டில் (2012-13) மொத்த சாகுபடி பரப்பளவு 76,336 ஹெக்டராக குறைந்துள்ளது. திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்மைத் துறை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.